செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!


இந்தியர்களைக் கொன்ற பிரிட்டன் பிரதமரின் கொள்ளுதாத்தா!

சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரான் 'இந்தியாவிற்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவோம்' என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், இவருடைய மூதாதையர்கள் இந்தியர்களைக் கொன்று குவித்தவர்கள் என்றும், இந்தியர்களின் சுதந்திர போராட்டத்தை நசுக்கியவர்கள் என்றும் லண்டனில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

டேவிட் கேமரானின் தாத்தாவுக்கு கொள்ளு தாத்தா வில்லியம் லோ. இந்தியா பிரிட்டனின் அடிமை நாடாக இருந்தபோது, சுதந்திர போராட்டம் சூடு பிடித்தபோது பிரிட்டன் அரசின் குதிரைப்படைத் தளபதியாக இருந்தவர். இந்தத் தகுதியை வைத்துக் கொண்டு சுதந்திரம் கேட்டு போராடிய ஏராளமான இந்தியர்களை ஈவு இரக்கம் பார்க்காமல் தன்னுடைய வாளால் வெட்டிக்கொன்றவர் என்று தெரியவந்துள்ளது.

குதிரைப்படையைத் தலைமை தாங்கிச் சென்று, எதிர்த்து வந்த இந்தியர்களை வில்லியம் லோ வெட்டி வீசிய, மொத்தமாக தூக்கில் தொங்கவிட்ட நினைவுகளை அவரே ஓவியமாகத் தீட்டி விட்டு மறைந்திருக்கிறார். அந்த ஓவியங்கள் பிரிட்டன் நூலகத்தில் பத்திரமாக உள்ளன. இந்நிகழ்வு குறித்து வில்லியம் லோ தன்னுடைய மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதங்களையும் பிரிட்டன் நுலகம் பத்திரமாக வைத்துள்ளது.

வில்லியம் லோ தன்னுடைய மேலதிகாரியும், தந்தையுமான ஜெனரல் சர் ஜான் லோ வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நமது குதிரைப்படை வெற்றியைச் சந்தித்துள்ளது. பழங்குடிகள் (இந்தியர்கள்) படை முறியடிக்கப்பட்டு விட்டது. அவர்களைச் சுத்தமாக அழித்துவிட்டோம் என்றே சொல்லவேண்டும். நூறுக்கும் மேற்பட்ட அவர்களுடைய பிணங்கள் அங்கங்கே சிதறியுள்ளன. நம் பக்கமும் ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டனர் சிலருக்கு காயமேற்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார்.

இந்தக் கடிதங்களில் சிலவற்றை சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

அனுபவம் வாய்ந்த குதிரை வீரன் குதிரையில் ஏறி வரும்போது, எதிரே வரும் தரைப்படையினரை வெட்டிச் சாய்த்துக் கொண்டே செல்வது எளிதான விஷயம். அப்படித்தான் வில்லியம் லோ மற்றும் அவருடைய படையினர் இந்தியர்களை கொன்று குவித்துள்ளனர்.

தற்போதைய பிரதமர் டேவிட் கேமரானின் பரம்பரை குறித்து மானிடவியல் அறிஞர் நிக் பாரட் ஆய்வுசெய்திருக்கிறார். அவருடைய முடிவுப்படி வில்லியம் லோ, சர் வில்லியம் மவுண்ட் என்பவரின் தாத்தா ஆவார். வில்லியம் மவுண்ட் எலிசபெத் லீவெல்லியன் என்பவரை கடந்த 1929 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதியினர் தான் இன்றைய பிரதமர் டேவிட் கேமரானின் நேரடியான தாத்தா பாட்டி என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நம்பர் 10, டவுனிங்ஹால் முகவரியில் உள்ளவர்கள் யாரும் பதில் எதுவும் கூறவில்லை. அதுதாங்க இங்கிலாந்து பிரதமரின் வீட்டு முகவரி!

வாழ்க ஆங்கிலேய அடிவருடி அரசியல்வாதிகள், வியாபார பண முதலைகள்!

கருத்துகள் இல்லை: